வயதானாலும் பிள்ளைதான் !

வயதானாலும் பிள்ளைதான் !

- மாலுமி

 


            வெயில் காலை எட்டு மணிக்கே உச்சிவெயில் மாதிரி இருந்தது. ஏழு வயது பிள்ளையை பள்ளிக்கூடத்தில் விடுவதற்காக முத்தான் பீடுநடை போட்டுக் கொண்டிருந்தான். அவனை விட்டுவிட்டு வாத்தியாரிடம் "நல்லா நாலு உதை போட்டு படிக்க வையுங்க சாமி" என்று விண்ணப்பித்துக் கொண்டு வயலுக்கு செல்ல வேண்டும். என்னதான் வெயில் என்றாலும் நாத்து நட, களை பிடுங்கன்னு வயலுக்குள்ள இறங்கிட்டா வெய்யிலே தெரிவதில்லை. ஆனால் இங்கே ரோட்டுலதான், ... 'எழவு, இந்த சூடு சுடுதே'? 

             "அப்பா...." முத்தானுக்கு ஒரே எரிச்சலாயிருந்தது. மகனின் கையைப் பிடித்து தரதரவென்று இழுக்காத குறையாக நடக்க ஆரம்பித்தான்.

             "யப்பா..." 

             "ஏண்டா" வள்ளென்று விழுந்தான்.

             "ஒண்ணுமில்லப்பா" மவுனம் சாதித்தான். முத்தானின் ரத்தமல்லவா? இளவயசிருந்தே கொஞ்சம் பிடிவாதம் இருக்கத்தானே செய்யும்.

             "கண்ணு, என்னடா வேணும்?  கூப்பிட்டியா?" கொஞ்சம் பவ்யத்தோடு கேட்டான்.

             "யப்பா ... கொஞ்சம் தூக்கிக்கப்பா,  கால் சுடுது..." 

             சே! எத்தனை பெரிய முட்டாள்தனம்?  நமக்கே தாங்கலைன்னால் அந்த பிஞ்சுப்புள்ள என்ன செய்யும்? கழுகு கோழிக்குஞ்சை தூக்குற மாதிரி 'லபக்'கென்று அவனை தூக்கி தோளில் உட்கார்த்தி வைத்துக் கொண்டான்.

             "யப்பா .... நம்ம பங்களா வீட்டுக்காரர் பையன் ... பூட்ஸ் போட்டுட்டு வருவாம்பா.....பொடியே சுடாதாம். எனக்கு கூட ஒரு நாள் மத்தியானம் போட்டுக்கரத்துக்கு தந்தாம்ப்பா... ரொம்ப நல்லா இருக்குப்பா"

             "டேய் ...அதெல்லாம் ரொம்ப வெலைடா. அடுத்த வருஷம் திருவிழாக்கு கையில காசு இருந்தா வாங்கி தரண்டா"

             "சரிப்பா" 

             சற்று நேரம் மௌனம். அவனுக்கோ, மகனுக்கோ, பொஞ்சாதிக்கோ யாருக்கும் போட்டுக்கொள்ள செருப்பு இல்லை. தன் நிலையை எண்ணி வருந்தினான். 

             "யப்பா...." என்று ஒரு இழு இழுத்தான்.

             "ஏண்டா?"

             "எனக்கு ஒரு செருப்பாவது வாங்கி கொடுப்பா... நான் பக்கத்து வீட்டு முருகன் கூட சேர்ந்து பள்ளிக்கூடம் போயிடுவேன்".

             "ம்...ம்..."  என்று தலையாட்டுவதைத் தவிர அவனால் வேறொன்றும் செய்ய இயலவில்லை. அதற்குள் பள்ளிக்கூடமே வந்துவிட்டது. அவனை இறக்கி விட்டான். கையிலிருந்த எட்டணாவை மகனின் சட்டைப்பையில் திணிக்க முயன்றான்.

             "இந்தாடா  எட்டணா ....எதனாச்சும் வாங்கிக்கோ".

             "இல்லப்பா....எனக்கு ஒரு செருப்பு வாங்கியாப்பா. உன்கிட்ட நான் காசெல்லம் கேட்க மாட்டேன்". எட்டணாவை முத்தானின் சட்டைப்பையிலேயே போட்டுவிட்டு, சிட்டாய் பறந்து விட்டான். முத்தான் கவுண்டர் வீட்டு தோட்டத்தை நோக்கி நடையை கட்ட ஆரம்பித்தான்.

             மதியம் ஒரு மணி இருக்கும். செல்லாத்தா சோறு கொண்டு வந்திருந்தாள். என்னதான் வெயில் என்றாலும், அந்த ஆலமரத்தடியில் உட்கார்ந்து அந்த பழைய சோத்தை அவள் கையால் சாப்பிடுவதில் உள்ள சுகமே தனிதான். ஒரு கவளம் வாயில் வைத்த பின்புதான் கவனித்தான்.

             "ஏ செல்லா, அது என்ன பையி?"

             "சோத்தை சாப்பிடுறியா முதல்ல... அப்புறமா சொல்றேன்".

             "என்னாடி ஒரே த்ரில் காமிக்கிற?"

             "நீ சாப்பிடுய்யா முதல்ல.. சொல்றேன்".

            சாப்பிட்டுவிட்டு, பானையிலிருந்து தண்ணீர் எடுத்து, கை கழுவிவிட்டு, அவள் சேலைத் தலைப்பில் கையைத் துடைத்துக் கொண்டான்.

             "யோவ், உங்க அம்மா ஊரில் இருந்து வந்து இருக்காங்க. வரும்போது உனக்காக பஜாரில் இருந்து செருப்பு வாங்கியாந்துதாம். நீ இத போட்டுட்டுதான் வேலை செய்யணுமாம்".

             "என்னடி இன்னும் சின்ன புள்ளயா என்ன? இதுக்கு பதிலா அரிசி, பருப்பு எதனாச்சும் வாங்கியாரக்கூடாதா... எங்க ஆத்தாள நான் என்ன சொல்ல?"

             "யோவ், உனக்கு நூறு வயசு ஆனாலும் உங்க அம்மாவுக்கு நீ குழந்தைதான்யா... இந்தா இதை போடுய்யா..." 

 

            செருப்பை பையில் இருந்து கீழே எடுத்துப் போட்டாள். காலை நுழைப்பதற்காக தூசு தட்டிக்கொண்ட முத்தான் என்ன நினைத்தானோ தெரியவில்லை. கால் அதற்குமேல் நகர மறுத்தது.

             "ஏய் செல்லா... செருப்பை எடு" ஒன்றும் புரியாமல் செருப்பை கையில் எடுத்தாள்.

             "அதை பையில் போட்டு வை".

             "என்னய்யா ஆச்சு உனக்கு?" 

             "போய் பத்திரமா கொண்டு போய் வைச்சிரு, நான் வந்த பின்னாலே ஆத்தாள அழைச்சிட்டுப் போய் இதை வாங்கின கடையில கொடுத்துட்டு, மேல ஒரு பத்தோ, இருபதோ போட்டு நம்ம புள்ளைக்கு ஒரு பூட்ஸ் வாங்க போறேண்டி. நூறு வயசு ஆனாலும் அவன் நமக்கு குழந்தை தானே?"

 

****                                          *****                                         *****                                        ****

 


Comments

Popular posts from this blog

Krishthemalumi - Intro

கடவுள் கொடுத்த பட்டா!